புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் வங்கதேசம் நாட்டுக்கான வெளிநாட்டு உதவி நிதியை பாதியாகக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை வங்கதேச அரசு தடுக்கத் தவறியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கான உதவி நிதி ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தனது 9-வது பட்ஜெட்டிலும் வெளிநாடுகளுக்கான உதவி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வங்கதேசத்திற்கான உதவி நிதியில் மத்திய அரசு அதிரடியான மாற்றத்தை செய்துள்ளது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்காமல் இந்தியாவுடன் மோதல் போக்கை அந்த அரசு கடைப்பிடித்து வருவதால், வங்கதேசத்திற்கான நிதி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஆண்டுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியில், பதற்றமான சூழல் காரணமாக ரூ.34.48 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி ரூ.5,586 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பூட்டான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பூட்டானுக்கு ரூ.2,289 கோடியும், நேபாளத்திற்கு ரூ.800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கான நிதி 8 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.550 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு ரூ.150 கோடி, மியான்மருக்கு ரூ.300 கோடி, ஆப்ரிக்க நாடுகளுக்கு ரூ.225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான நிதி, முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்த்தி ரூ.120 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஈரான் நாட்டில் உள்ள சாபஹார் துறைமுகம் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கியத் திட்டமாக இருந்தாலும், தற்போதைய அமெரிக்க அரசியல் சூழல் இதற்கு தடையாக உள்ளதால், சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படவில்லை.
