வங்கதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் தீவைத்து கொலை; 3 வாரங்களில் 4வது உயிரிழப்பு
டாக்கா: வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலதிபர் கோகோன் தாஸ் (50), மதவெறி கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஷரியத்பூர் மாவட்டம்-ஐ சேர்ந்த தொழிலதிபரான கொகோன் தாஸ், தன் வீட்டிற்கு சென்றபோது வழிமறித்த மதவெறி கும்பல், அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர், அவரை தீ வைத்து எரித்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.
அதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொகோன் தாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த நான்காவது நபர் வன்முறையால் உயிரிழந்த சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
நான்காவது சோகம்!
முதலாவது, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, பின்னர் அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இரண்டாவது, ராஜ்பாரி மாவட்டம்-ஐ சேர்ந்த 29 வயதான ஹிந்து இளைஞர் அம்ரித் மண்டல், கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மூன்றாவது, ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 42 வயதான ஹிந்து தொழிலாளி பிஜேந்திர பிஸ்வாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தற்போது நான்காவது, 50 வயதான கொகோன் தாஸ், கும்பல் தாக்குதலுக்குப் பிறகு தீக்கிரையாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
