வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில், முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்பியதாக கூறி, திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை கும்பல் தாக்கி கொலை செய்து, அவரது உடலை நடுரோட்டில் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததுடன், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், கொல்கட்டாவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய மோகன் பகவத், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அங்கு நிலைமை சற்று கடினமாக உள்ளது என குறிப்பிட்டார். பாதுகாப்பு சூழ்நிலை சவாலானதாக இருந்தாலும், அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும், உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வங்கதேச விவகாரத்தில் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பகவத் தெரிவித்தார். இந்திய அரசு இந்த விஷயத்தில் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும், சில விஷயங்களை வெளிப்படையாக கூற முடியும், சிலவற்றை கூற முடியாது என்றும் அவர் விளக்கினார். சில நேரங்களில் முடிவுகள் கிடைக்கலாம், சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம்; ஆனால், முயற்சி தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஹிந்துக்கள் மீதான தாக்குதல், வங்கதேசத்தவர்கள் ஊடுருவல் மற்றும் அந்நாட்டின் தற்போதைய சூழ்நிலை ஆகியவை மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். வங்கதேச எல்லையை திறந்து விடுவது நிர்வாகம் சார்ந்த முடிவு என்றும், நாட்டிற்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள், நாம் தேவையாக இருக்கும் போது மென்மையாக நடந்து கொள்வதாகவும், அவர்களை பின்பற்றாவிட்டால் அடக்க முயற்சி செய்வதாகவும் பகவத் குறிப்பிட்டார். அதற்கேற்ற பதில்களை இந்தியா வழங்க வேண்டும் என்றும், தற்போதைய நிலையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறப்பாக உள்ளது என்றாலும், அதனை மேலும் வேகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
