“வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு; மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு”
டாக்கா:
மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் காங்கிரஸ் (HRCBM) குற்றம்சாட்டியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சமீப நாட்களாக ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை, மத நிந்தனை செய்ததாக கூறி, அங்குள்ள கும்பல் மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரையும் அப்பகுதியினர் அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினமான ஹிந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என கூறி புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டுகளை சிறுபான்மையினரை துன்புறுத்தவும், அவர்களின் சொத்துக்களை பறிக்கவும் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக HRCBM தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை வங்கதேசத்தின் 32 மாவட்டங்களில் 72 போலி மத நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களாகும் என்றும், தனிப்பட்ட பகையை பழிதீர்க்கவோ, நிலம் மற்றும் பிற சொத்துகள் தொடர்பான பிரச்னைகளை திசைதிருப்பவோ மத நிந்தனை குற்றச்சாட்டுகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பிறகு, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 27 கொலைகள், பல கோவில்கள் மீது தாக்குதல்கள் உள்ளிட்ட மொத்தம் 258 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால், சிறுபான்மையின மக்களிடையே மேலும் அச்சம் அதிகரிக்கும் என்றும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்தாலும், அது போதுமான நடவடிக்கையாக இல்லை என்றும் HRCBM குறிப்பிட்டுள்ளது.
