வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கொலை: பெட்ரோல் பங்கில் ஊழியர் மீது கார் ஏற்றி படுகொலை
டாக்கா: வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த ஹிந்து ஊழியர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசம்வில், கடந்த ஆண்டு முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வங்கதேசத்தில் சுமார் 1.13 கோடி ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். இது அந்நாட்டு மக்கள்தொகையில் சுமார் 8 சதவீதமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும், ஹிந்துக்களை குறிவைத்து 51 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில், ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த சிலர், பெட்ரோல் நிரப்பிய பின் பணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற போது, ரிபான் சாஹா (30) என்ற ஹிந்து ஊழியர் மீது அந்த காரை ஏற்றி கொன்று விட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்த அப்துல் ஹஷீம் மற்றும் டிரைவர் கமல் ஹுசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அப்துல் ஹஷீம், வங்கதேச தேசியவாத கட்சியின் மாவட்ட பொருளாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் அநீதி
வங்கதேசத்தில் வன்முறை மீண்டும் தீவிரமடைந்ததற்கு பின்னர், மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (30) என்ற இளைஞர், மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சம்பவத்தில், அவரது உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹிந்துக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியரின் மரணத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
