டாக்கா: அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே மரண தண்டனை மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு குடியிருப்பு திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டு சிறை என மொத்தம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், ஷேக் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகளான துலிப் ரிஸ்வானாவுக்கு, இரண்டு வழக்குகளில் தலா 2 ஆண்டுகள் சிறை என மொத்தம் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதுடன், அந்நாட்டின் முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஷேக் ஹசீனாவின் மகன் ருத்வான் முஜிப் சித்திக்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
