வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில், மற்றொரு ஹிந்து நபர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மேலும், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் (29) என்ற ஹிந்து இளைஞர் கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதேபோல், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற ஹிந்து தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்த நிலையில், ஷரியத்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள சமீபத்திய தாக்குதலில், 50 வயதான கோகோன் தாஸ் என்பவர் கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு குழு சுற்றிவளைத்து தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல், கடந்த 15 நாட்களில் வங்கதேசத்தில் ஹிந்து நபர்கள் மீது நடந்த நான்காவது வன்முறை சம்பவமாகும். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கடும் கவலை எழுந்துள்ளதாக சமூக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
