பெய்ரூட்: லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சில குடியிருப்பு பகுதிகளிலும் வான்வழி குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றன. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் கிழக்கு லெபனானின் பால்பெக் நகரில் உள்ள குடியிருப்பு வளாகங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள 13 கிராமங்கள் மற்றும் நகரங்களை உடனடியாக காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பகுதிகளில் விரைவில் தாக்குதல் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இஸ்ரேல் படைகள் தற்போது லெபனான் எல்லைக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு லெபனான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போதிய ராணுவ வலிமை இல்லாத காரணத்தால் லெபனான் ராணுவத்தால் ஹெஸ்பொல்லா அமைப்பினரை எதிர்த்து நேரடி தாக்குதல் நடத்த முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
