ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை: நிதின் நபின்
புதுடில்லி:
பாஜவின் புதிய தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிதின் நபின்,
“ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதின் நபின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் மற்றும் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொறுப்பேற்ற பின் பேசிய நிதின் நபின், தன்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டனுக்கு இந்த உயரிய பொறுப்பை வழங்கியதற்காக கட்சி தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி நாட்டுக்காக அயராது உழைப்பதை தொண்டராக இருந்து பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
குஜராத்தின் ஆனந்த் பகுதியில் பிரதமருடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவரே உண்மையான தலைவராக உருவாக முடியும் என்பதை அன்றே உணர்ந்ததாக கூறினார்.
இன்றைய நாள் தனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம் என்றும், பதவி மட்டுமல்லாது கட்சியின் சித்தாந்தம், மரபு மற்றும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் நிதின் நபின் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்கள் வளர்ந்த இந்தியா என்ற கனவுடன் நாட்டை முன்னேற்ற உழைத்து வருவதாகவும், அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்த சம்பவத்தை குறிப்பிட்ட நிதின் நபின், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்றும் கூறினார். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அடுத்த சில மாதங்களில் தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை குறிப்பிட்ட அவர், மாறிவரும் மக்கள்தொகை அமைப்பு சவாலாக இருந்தாலும், பாஜ தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் கட்சியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
