புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் 2-வது ஆண்டு பிராண பிரதிஷ்டை தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை தினம், இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் தெய்வீக விழாவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புனித நாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து ராம பக்தர்களின் சார்பில், பகவான் ஸ்ரீ ராமரின் பாதங்களில் கோடிக்கணக்கான வணக்கங்களை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பகவான் ஸ்ரீ ராமரின் கருணை மற்றும் ஆசீர்வாதங்களால், பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ராம பக்தர்கள் கொண்டிருந்த கனவு நிறைவேறியதாக கூறியுள்ளார். குழந்தை ராமர் இன்று மீண்டும் தனது அற்புதமான இல்லத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அயோத்தியின் தர்மக் கொடி அதற்கு சாட்சியாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கத்தின் உருவகமாக விளங்கும் ராமர், ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்க உணர்வுகளை ஆழப்படுத்துவார் என்றும், இது வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்கும் வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
