ராணுவ வீரர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு; இந்திய ராணுவம் நெறிமுறை..!
இந்திய ராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் கசியும் அபாயம் இருப்பதால், ராணுவ வீரர்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது அவசியம் என ராணுவம் கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக, அவ்வப்போது விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிமுறைகளின்படி, இன்ஸ்டாகிராம் தளத்தை தகவல்களை பார்ப்பதற்காக மட்டும் பயன்படுத்தலாம். ஆனால், அதில் பதிவுகளை வெளியிடுதல், கருத்து எழுதுதல், பதிவுகளை பகிர்தல், லைக் செய்வது அல்லது நேரடி செய்திகளை அனுப்புவது போன்ற எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விதிகள் எக்ஸ், யூடியூப் மற்றும் குவாரா போன்ற சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஸ்கைப், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் மூலம் பொதுவான தகவல்களை பரிமாறிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல்களை பகிரும் போது, அறிமுகமான நபர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தகவல் பெறுபவர் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், லிங்க்ட்இன் இணையதளத்தை வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
