புதுடில்லி: **Rahul Gandhi**யின் எம்பி பதவியை பறிப்பதுடன், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளதாக பாஜ எம்பி Nishikant Dubey தெரிவித்துள்ளார்.
லோக்சபா நேற்று கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசையும், பிரதமர் **Narendra Modi**யையும் கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் முன்வைத்தார்.
அவரது பேச்சுக்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக பாரத மாதாவை அந்நாட்டிற்கு மத்திய அரசு விற்றுவிட்டது’ என ராகுல் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து விவாதம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், எந்த ஆதாரமும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்ததாக கூறிய நிஷிகாந்த் துபே, அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும் என நோட்டீஸ் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த அவரது சகோதரியும், வயநாடு தொகுதி எம்பியுமான Priyanka Gandhi Vadra, இதனால் ராகுலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
