ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியா, சீனா மீது கடும் வரி விதிக்க அமெரிக்கா தயாராகிறது
வாஷிங்டன்:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளதாக குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ரஷ்யாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து கடும் வரி விதிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லிண்ட்சே கிரஹாம் வெளியிட்ட அறிக்கையில், டிரம்ப் உடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்ததாகவும், தாம் மற்றும் செனட்டர் ப்ளூமென்டால் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்த ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த சலுகைகள் வழங்கப்படும் வேளையிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து அப்பாவி மக்களை கொன்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், அதனை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்றார்.
இந்த மசோதா மூலம், புடினின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாக விளங்கும் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளை தண்டிக்கும் அதிகாரம் டிரம்ப்க்கு வழங்கப்படும். குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் வகையில் இந்த மசோதா வலுவான அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
அடுத்த வாரமே, இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவின் படி, ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கும் 500 சதவீத வரி விதிக்கப்படும் அம்சம் இடம்பெற்றுள்ளது.
