ஜெருசலேம்: பிரதமர் மோடி தனது அழைப்பின் பேரில் பிப்ரவரி 25ம் தேதி இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு, வேளாண்மை, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசிக்க உள்ளனர். மேலும், இந்தியா–இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதும் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது.
2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர். இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே வலுவான உறவு நிலவுகிறது. நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசுகிறோம்; ஒருவரையொருவர் சந்தித்து வருகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
