மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மோடி வாக்குறுதி
புதுடில்லி:
மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் அந்த இடத்தை நேரில் அடைய முடியாத நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இருப்பினும் சில முக்கிய விஷயங்களை விரிவாக பேச முடியாததால், அவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாம் எப்போதும் சேவை செய்வோம் என உறுதியளித்த பிரதமர், அவர்கள் திரிணமுல் காங்கிரசின் கருணையால் இங்கு இல்லை என்றும், பாஜ அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தின் மூலம் இந்தியாவில் மரியாதையுடன் வாழும் உரிமை பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜ அரசு அமைந்தால், மதுவா சமூகத்தின் நலனுக்காக இன்னும் அதிகமாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஏழை மக்களை கொள்ளையடித்து, மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையை பரப்பி, பெண்கள் சக்திக்கு எதிராக கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் ஊடுருவல்காரர்களை திரிணமுல் காங்கிரஸ் தனது முழு பலத்துடன் பாதுகாத்து வருவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தவுடன், இத்தகைய ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மேற்கு வங்க மக்களுக்கு தாம் அளிக்கும் வாக்குறுதி என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்க மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கால்பந்தை விரும்பும் மாநிலமாக அறியப்படும் மேற்கு வங்கம் இன்று வெட்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் சாடினார். திரிணமுல் காங்கிரஸ் தொடர்புடைய சமீபத்திய சம்பவம், கால்பந்தை நேசிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனங்களை உடைத்துவிட்டதாகவும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை அந்த கட்சி அரசியல் சுயநலத்திற்காக தடுத்து நிறுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜ நல்லாட்சியை நம்பும் கட்சி என தெரிவித்த பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் பணம் மற்றும் கமிஷன் பற்றியே சிந்திப்பதாக விமர்சித்தார். அந்த கட்சியின் ஒத்துழையாமை காரணமாக வீடமைப்பு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் கூறினார்.
பீஹார் மக்கள் ‘காட்டாட்சி ராஜ்ஜியம்’ திரும்ப வேண்டாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் உருவாக்கிய அதேபோன்ற ‘காட்டாட்சி ராஜ்ஜியம்’ நிலைமையிலிருந்து மேற்கு வங்கத்தை விடுவிக்க வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும், மாநில மக்களின் மேம்பாட்டிற்காக பாஜ அரசு தொடர்ந்து அயராது உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.
