திருச்சி: முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உச்சத்தில் இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சியில் நடைபெற உள்ள தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். முதல்வர் ஸ்டாலின் தற்போது தோல்வி பயத்தின் உச்சத்தில் உள்ளார். எப்போது தேர்தல் நடந்தாலும் அவர் தோல்வி அடைவது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.
அவர் தற்போது ஆட்சியில் இருப்பதால் பல்வேறு சர்வே முடிவுகள் அவருக்கு கிடைத்திருக்கும். அதனால் தோல்வி உறுதியானது என்பதை அறிந்த அவர், தோல்வி பயத்தில் பல்வேறு கருத்துகளை தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.
கண்டிக்கத்தக்கது
மேற்குவங்கத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனாதிபதிக்கு உரிய மரியாதையை திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து இருக்கும் இண்டி கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. ஜனாதிபதி வருகை தரும் போது முதல்வர் நேரில் சென்று வரவேற்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அமைச்சர் ஒருவர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும்.
ஜனாதிபதி மிகவும் பின்தங்கிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நிலையில், அவரை இழிவுபடுத்தும் வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தாவின் செயலும், இண்டி கூட்டணியின் செயல்களும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தேஜ கூட்டணி
விஜய் இலவசங்கள் இல்லை என்று முன்பு கூறினார். ஆனால் தற்போது இலவசங்களை அறிவித்து வருகிறார். அவர் முதல்முறையாக அரசியலில் நுழைந்துள்ளார்; இது அவருடைய முதல் தேர்தல். அவர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார், எவ்வளவு வாக்குகளை பெறுவார் என்பது தெரியாது.
சிரஞ்சீவியின் கூட்டத்தை நாம் பார்த்தோம். அந்த கூட்டம் பின்னர் என்ன ஆனது? விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஏற்பட்ட பெரிய கூட்டங்கள் இன்று எங்கே இருக்கின்றன? சினிமா நடிகர்களை பார்க்க வரும் கூட்டம் வேறு; அரசியல் நோக்கத்துடன் வரும் கூட்டம் வேறு. சினிமா ரசிகர்கள் அனைவரும் அரசியலில் வாக்களிப்பார்கள் என்ற நிலை தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்தோடு முடிந்து விட்டது.
கூட்டணி தொடர்பான முடிவுகளை தேசிய தலைமை அறிவிக்கும். தற்போது தேஜ கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. எங்கள் கூட்டணி திமுகவை விட முன்னேறி வேகமாக பயணித்து வருகிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
