முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வேன்; பொன் மாணிக்கவேல் அறிவிப்பு
மதுரை:
2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின்க்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொள்வேன் என, மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரியும், திமுக அரசை கண்டித்தும் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார். நரிமேட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர், பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் பேசினார்.
பூர்ணசந்திரனை தற்கொலைக்கு தள்ளியதில் முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இறப்பதற்கு முன்பு பூர்ணசந்திரனே, தன் குடும்பம் திமுகவை சேர்ந்தவர்கள் என தெரிவித்ததாகவும், பொதுநலத்திற்காக உயிரிழக்கும் திமுகவை சேர்ந்தவர்களையும் அந்தக் கட்சி நிர்வாகிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு எனவும் அவர் கூறினார்.
சிறந்த ஆன்மிகவாதி
பூர்ணசந்திரனின் மரணத்தை கொச்சைப்படுத்தி களங்கப்படுத்துபவர்கள் கீழ்த்தரமானவர்கள் என பொன் மாணிக்கவேல் கடுமையாக சாடினார். அவர் திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், சிறந்த ஆன்மிகவாதி என்றும், தன் குழந்தைகளுக்கு கடவுள், தீபம் போன்ற படங்களை வரைந்து ஆன்மிக உணர்வை வளர்த்தவர் என்றும் தெரிவித்தார். முருகனுக்கு தீபம் ஏற்ற முடியவில்லையே என்ற வேதனையில் தன் உயிரையே தியாகம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பூர்ணசந்திரன் வீட்டிற்கு ஹிந்துக்கள் அனைவரும் ஒருமுறையாவது வர வேண்டும் என்றும், எந்தக் கட்சி சார்பிலும் தான் வரவில்லை என்றும், இனி மதுரைக்கு வந்தால் அவரது வீட்டிற்கு வராமல் செல்ல மாட்டேன் என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் திரள வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசுக்கு வரியாக ஆண்டுதோறும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் செலுத்துவதாகவும், அதில் ரூ.120 கோடியை கையாடல் செய்து வசதிகளை பெருக்கிக் கொள்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பூர்ணசந்திரனின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நிதி திரட்டப்படும் என்றும், அவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, திரட்டப்படும் தொகையை வைப்புத் தொகையாக வைத்து, ஒரு பைசா கூட யாரும் தொட முடியாத வகையில் பாதுகாப்பதாகவும் பொன் மாணிக்கவேல் உறுதியளித்தார்.
கமிஷனராக இருந்திருந்தால்
காவல்துறையில் திமுக மற்றும் அதிமுக என இரு பிரிவுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், கமிஷனர் பதவியில் தான் இருந்திருந்தால், “நான் சட்டத்தின் வேலைக்காரன்; அரசாங்கத்தின் வாய்மொழி உத்தரவுகள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல” என, உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பேன் என்றார்.
உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது என்றும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தன் மீது வழக்கறிஞராக ஒன்றரை மணி நேரம் வாதாடியிருந்தாலும், அவரது நேர்மையான பணிக்காக ஆதரவாக 2,000 கையெழுத்துகள் கூட போடத் தயார் என்றும் பொன் மாணிக்கவேல் கூறினார். அவர் தன்னை எதிர்த்திருந்தாலும், தாம் அவருக்கு நல்லதே செய்வேன் என்றும் தெரிவித்தார்.
பூர்ணசந்திரன் குடும்பம் சிவகங்கை சமஸ்தானம் வேலு நாச்சியாரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என தெரிவித்ததாகவும், அந்த மரபை பெயருக்காக பயன்படுத்தி ஓட்டு கேட்பது யாரை ஏமாற்றும் செயல் என்றும் அவர் விமர்சித்தார். இத்தகைய சூழலில் அந்த குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நேரில் சென்று தலா ரூ.10 லட்சம் வழங்கியதாக கூறிய அவர், மனிதாபிமான அடிப்படையில் பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு முதல்வர் சார்பில் ஒருவர் கூட ஆறுதல் கூற வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஓட்டு வங்கிக்காக செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் கடும் பிரசாரம் மேற்கொள்வேன் என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உடனிருந்தார்.
