மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க உத்தரப்பிரதேச அரசுப் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்
மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும், மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கவும் உத்தரப்பிரதேச அரசு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பார்த்தா சர்தி சென் சர்மா வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டு நிகழ்ச்சியின் போது தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சுழற்சி முறையில் செய்திகளை வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொபைல் திரைகளையே நீண்ட நேரம் கவனிக்கும் தற்போதைய சூழலில், செய்தித்தாள் வாசிப்பு மாணவர்களின் கவனத் திறனை அதிகரிக்கும் என்றும், இது தொடர்ந்து பழக்கமாக மாறும்போது பொது அறிவு மேம்பட்டு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும் பெரிதும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மொழிப்புலமை, சிந்தனைத் திறன் மற்றும் சவாலான நேரங்களில் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை அறியும் மாணவர்கள் சமூகத்துடன் நல்ல உறவை பேண முடியும் என்றும், பொறுப்புள்ள குடிமகனாக வளர செய்தி வாசிப்பு முக்கிய பங்காற்றும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாரந்தோறும் பள்ளி நூலகங்களில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவை கதை, நாவல், வாழ்க்கை வரலாறு போன்ற வகைகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
