மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: 1,425 வார்டுகள் கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி
மும்பை: மஹாராஷ்டிராவில் நடைபெற்ற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் 29 மாநகராட்சிகளுக்குட்பட்ட 2,869 வார்டுகளில் 1,425 இடங்களை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றியை பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் தற்போது தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) இணைந்த ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
மும்பை, புனே, சத்ரபதி சம்பாஜிநகர், நவி மும்பை, கல்யாண் டோம்பிவிலி, வசைவிரார், நாக்பூர், நாசிக், சோலாபூர், அமராவதி, அகோலா, பிம்ப்ரி சின்ச்வாட், தானே, உல்லாஸ்நகர் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.
மும்பை மாநகராட்சியை தக்கவைக்க, நீண்ட கால அரசியல் பகையை மறந்து உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து களம் கண்டனர். அதேபோல், புனே மாநகராட்சியை மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கோட்டையாக மாற்ற அஜித் பவார், சரத் பவார் உடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஓட்டுகள் எண்ணப்பட்டதில், 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களில் 1,425 இடங்களை கைப்பற்றி பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆசியாவிலேயே செல்வமிக்க மாநகராட்சியாக கருதப்படும் மும்பையில், மொத்தம் 227 வார்டுகளில் பா.ஜ., மட்டும் 89 இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் சிவசேனாவின் 28 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 இடங்களையும், உத்தவ் சிவசேனா 65 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வெற்றி பெற்றது.
‘வன்சித் பகுஜன் அகாடி’ கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 24 இடங்களையும், AIMIM 8 இடங்களையும் பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 3, சமாஜ்வாதி 2 மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றியது.
நவி மும்பை மாநகராட்சியில் 69 இடங்களை வென்று பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல் கல்யாண் டோம்பிவிலி 50, மிராபயந்தர் 78, நாசிக் 72, பன்வெல் 55, புனே 119, பிம்ப்ரி சின்ச்வாட் 84, சோலாபூர் 87, சத்ரபதி சம்பாஜிநகர் 57, நான்டெட் 45 மற்றும் நாக்பூர் மாநகராட்சியில் 102 இடங்களையும் பா.ஜ., கைப்பற்றியுள்ளது.
