சென்னை: தமிழகத்தில் ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழகத்தை மீட்டு, விடியல் வெளிச்சத்தை காணச் செய்துள்ளது தி.மு.க. அரசு. இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் தி.மு.க., அரசு பெரும் பங்காற்றி வருகிறது.
தமிழகத்தில் ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே **பா.ஜ.க.**வின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு மவுன சாட்சியாக அ.தி.மு.க., அமைதி காக்கிறது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டை, தி.மு.க., அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து உணர்த்தி வருகிறது. தி.மு.க., அரசின் குரல், பா.ஜ., ஆட்சி இல்லாத பிற மாநிலங்களிலும் இன்று ஒலிக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம், தமிழக மக்களின் மனதில் உறுதியாக பதிந்துள்ளது.
தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.,வும், அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படுகின்றன. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ., அரசுக்கு சாமரம் வீசும் அடிமையாக அ.தி.மு.க., செயல்படுகிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
