மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தற்போது மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ள நிலையில், அதனை பாராட்ட மனமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு அழைத்தது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து என்றும், அது பாஜவின் நிலைப்பாடு என்றும் கூறினார். திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்ததை நினைவுபடுத்திய அவர், வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை கேள்வி எழுப்பினார்.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக, திமுக தேர்தல் அறிக்கையில் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், மத்திய அரசு தற்போது 125 நாட்களாக உயர்த்தியிருந்தாலும் அதனை பாராட்ட மனமில்லை என்றும் இபிஎஸ் கூறினார். மேலும், திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், பழைய பெயரே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். பார்லிமென்டில் பேச வேண்டிய விஷயங்களை அங்கேயே வாதாட வேண்டும் என்றும் கூறினார்.
மாநில அரசின் நிதிநிலையைப் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார். பார்லிமென்டில் தேவையான அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும் விமர்சித்தார். இது திமுக அரசின் பெரிய சாதனை என கிண்டலாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.
தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பிறகே கடன் அதிகரித்துள்ளதாகவும், திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
