மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: சோனியா அறிவிப்பு
புதுடில்லி:
100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் பார்லிமென்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக நினைவூட்டினார். அந்தச் சட்டம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சட்டபூர்வ உரிமையை வழங்கியதுடன், கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தி, மகாத்மா காந்தியின் கனவுகளை முன்னெடுத்துச் சென்றதாக அவர் கூறினார்.
இந்நிலையில், அந்த வேலை உறுதி திட்டத்தில் பாஜ அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், இது உழைக்கும் மக்களின் மீதான ‘புல்டோசர் தாக்குதல்’ எனவும் சோனியா காந்தி விமர்சித்தார். இது ஒரு கட்சிக்கான விவகாரம் அல்ல; தேச நலன் சார்ந்த பிரச்னை என்றும் அவர் கூறினார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அந்த திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையே மத்திய அரசு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
எந்தவிதமான விவாதமும் இல்லாமல், எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமலேயே இந்த மாற்றங்கள் திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை சிதைத்துள்ளதாகவும், கிராமப்புற ஏழைகளின் நலன்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் சோனியா காந்தி கூறினார்.
100 நாள் வேலைத் திட்டத்தை நீக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கருப்புச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். தன்னைப் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தொண்டர்களுடன் இணைந்து நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
125 நாட்களாக அதிகரிப்பு
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் படி, 100 நாள் வேலை 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் எதிர்த்து பார்லிமென்டில் போராட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக, தற்போது சோனியா காந்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
