மதுரோ கைது எதிரொலி: வெனிசுலாவில் இடைக்கால அதிபர் நியமனம்
கராகஸ்:
அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிபர் மதுரோவை சிறைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு இந்த கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வெனிசுலா உச்சநீதிமன்றம் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.
இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வெனிசுலாவின் ஒரே சட்டப்பூர்வ அதிபர் நிகோலஸ் மதுரோ தான். அவரை அமெரிக்கா உடனடியாகவும், எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
டெல்சி ரோட்ரிக்ஸ் யார்?
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெனிசுலாவின் துணை அதிபராக நியமிக்கப்பட்டவர்.
தற்பொழுது துணை அதிபர் பதவியுடன், நிதி மற்றும் எண்ணெய் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
மதுரோ தலைமையிலான சோசலிச அரசை உறுதியாக காத்தவர் என்பதால், அவரை மதுரோ “புலி” என வர்ணித்துள்ளார்.
வெனிசுலா மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வழக்கறிஞர்.
2013–2014: தகவல் தொடர்பு அமைச்சர்
2014–2017: வெளியுறவு அமைச்சர்
கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் செல்வாக்கு வேகமாக உயர்ந்தவர்.
ஏன் அமெரிக்க தாக்குதல்?
வெனிசுலா போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாக இருப்பதாகவும், குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
