மதுரை: அமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில், முன்னாள் உதவியாளர் இலக்குவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் மற்றும் முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெய் பாலாஜி (42) மற்றும் அவரது மனைவி கலாவதி (42) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிப். 5ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஜெய் பாலாஜியுடன் தொடர்புடையவராக இலக்குவன் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த இலக்குவன், அமைச்சர் தொடங்கிய தகவல் தொழில்நுட்பப் பிரிவில் மாநில துணை அமைப்பாளராக இருந்தவர் என கூறப்படுகிறது. அவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 14 கோடி ரூபாய் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் விசாரணையின் மையமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகே நடவடிக்கைகள் தொடங்கியதாக கட்சியினர் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஜெய் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து இலக்குவன் தலைமறைவானார். போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. வெளிநாட்டில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
