மதச்சார்பு கட்டடங்களுக்கு என்.ஓ.சி., விலக்கு; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் அறிவிப்பால் கட்டுமான துறை அதிர்ச்சி
சென்னை:
2019 முதல் 2024 வரை நடைமுறையில் இருந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன் படி, மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் என்ஓசி (NOC) கோராமல் திட்ட அனுமதி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் பெருவிழா 2025’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கிறிஸ்துமஸ் விழா அன்பும் சகோதரத்துவமும் நிறைந்ததாக நடைபெறும் இந்த நேரத்தில் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், திராவிட மாடல் அரசு சிறுபான்மையினருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்ததுடன், நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதாக முதல்வர் நினைவுபடுத்தினார். அந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, தங்களின் தேவைகளை கோரிக்கையாக முன்வைக்கும் முன்பே அரசு அதை உணர்ந்து நிறைவேற்றுவதாக பலர் பாராட்டியதாகவும் அவர் கூறினார்.
சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெறவும் அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். திருநெல்வேலியில் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, இந்த விழா மேடையிலும் இனிகோ முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.
அதன்படி, 2019 முதல் 2024 வரை நடைமுறையில் இருந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன் கீழ், மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் என்ஓசி வலியுறுத்தப்படாமல் திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும், அந்த காலத்தில் விண்ணப்பித்த கட்டிடங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவித்தார்.
இனிகோவின் கோரிக்கைகள் இனி இல்லை என்று சொல்லும் அளவுக்கு அறிவிப்புகள் செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிட்ட முதல்வர், அரசு சாதனை திட்டங்களை மக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் இன்றைக்கு எந்தவிதமான அச்ச உணர்வுடன் வாழ்கிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றும், அத்தகைய அச்சத்தை உருவாக்கும் எதேச்சாதிகார சக்திகளை எதிர்க்கும் திறன், கொள்கை மற்றும் உணர்வு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போதும், தற்போதும், சிறுபான்மையினரின் வாக்குரிமையை உறுதி செய்ய அரசு உறுதியுடன் களப்பணி செய்து வருவதாக அவர் கூறினார்.
அன்பு வழியில் சமத்துவத்தை விரும்பி, சக மனிதர்களை சகோதர சகோதரிகளாக கருதும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர், ஜனநாயகத்தில் இத்தகைய வலிமையான சக்திகள் ஒன்றிணைந்தால் எந்த பாசிச சக்திகளாலும் எதையும் செய்ய முடியாது என்றார். திராவிட முன்னேற்றக் கழகமும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் எப்போதும் சிறுபான்மையினருக்கு துணையாக இருக்கும் என்றும், அதேபோல் அவர்கள் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
