மதச்சார்பற்ற வங்கதேசம் ஆபத்தில்; யூனுஸ் அரசு மீது தஸ்லிமா நஸ்ரின் தாக்கு
திருவனந்தபுரம்:
வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மதவாதிகளுடனும் சமூகப் பிளவை உருவாக்கும் சக்திகளுடனும் கைகோர்த்துள்ளதாக, வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின், தன் எழுத்துகளில் மதவாத சிந்தனைகளை விமர்சித்ததன் காரணமாக, முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கும், கொலை மிரட்டல்களுக்கும் உள்ளானார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசின் நடவடிக்கையின்மை காரணமாக, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, தற்போது ஸ்வீடன் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில்,
“என் புத்தகங்களுக்காக மதவாதிகள் எனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தபோது, அப்போதைய வங்கதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றே அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று வங்கதேசம் இத்தகைய மோசமான நிலைக்கு சென்றிருக்காது,” என கூறினார்.
தொடர்ந்து அவர்,
“இன்று வங்கதேசத்தில் பிரிவினைவாத சக்திகள் தான் அதிகாரத்தில் உள்ளன. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மதவாதிகளுடனும், சமூக ஒற்றுமையை சிதைக்கும் சக்திகளுடனும் கைகோர்த்துள்ளார். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக போராடி பெற்ற மதச்சார்பற்ற வங்கதேசத்தை, மீண்டும் எவ்வாறு மீட்டெடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன்,” என்று வேதனையுடன் பேசினார்.
மேலும்,
“நாடு தற்போது கடுமையாகப் பிளவுபட்டுள்ளது. முஸ்லிம் மதவாதிகள் சிறுபான்மை சமூகங்களை தாக்கி, கொன்று, துன்புறுத்தி வருகின்றனர். நீண்டகால ஆட்சிக்காக மதவெறியர்களின் ஆதரவை நாடும் அரசு, மதச்சார்பற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மையங்களை உருவாக்காமல், மதப் பள்ளிக்கூடங்களை அதிகமாக கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. இந்த போக்கை வங்கதேச அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்,” என தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தினார்.
