மதுரை: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது போலீசாரின் செயல்பாடு குறித்து நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா, தன் காரில் நகை திருடுபோனது குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து, கோவில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் மற்றும் போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். மேலும், மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார் உள்ளிட்டோர் கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசார் ஆனந்த், சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நகை திருட்டு குறித்த நிலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சி.பி.ஐ. தரப்பு விளக்கமளிக்கையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் 94 சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்ததில், அஜித்குமார் நகை திருட்டில் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, போலீசாரின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். “உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால், அடித்து கொலை செய்வீர்களா? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என கூற வேண்டிய கடமை போலீசாருக்கு உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “அஜித்குமார் நடத்தை குறித்து குறை கூற வேண்டாம். உடற்கூராய்வில் அவர் மது அருந்தியதாக குறிப்பிடப்படவில்லை. போலீசார் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்,” என நீதிபதி தெரிவித்தார்.
சி.பி.ஐ. தரப்பு, போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டது.
இறுதியில், “போலீசார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் விடக்கூடாது. வழக்கு விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது,” என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மாவட்ட நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
