போலி டாக்டர்கள், போலி நோயாளிகள்: அல் பலாஹ் பல்கலை குறித்த அதிர்ச்சி தகவல்கள்
புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலைக்கழகம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், அந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டிய டாக்டர் உமர் நபி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், உமர் நபியின் கூட்டாளிகளான பெண் டாக்டர் ஷாஹின் சயீத், டாக்டர்கள் முசம்மில், ஆதிர் ராதோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் மாணவர்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மாணவர்களிடமிருந்து முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜாவத் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், அல் பலாஹ் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 15ஆம் தேதி டில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய டாக்டர்கள், அல் பலாஹ் பல்கலை வளாகத்தை ஒரு தளமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் உள் நிர்வாக முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
டாக்டர் நியமனத்தில் கடும் குறைபாடுகள்
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் முசம்மில், ஷாஹின் சயீத் மற்றும் உமர் நபி ஆகியோர், எந்தவித காவல்துறை பின்னணி சரிபார்ப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெயரளவு மருத்துவர்கள்
தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில், பல டாக்டர்கள் பெயரளவில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாதத்திற்கு 22 நாட்கள் அல்லது வாரத்திற்கு இரு முறை மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். இந்த டாக்டர்கள் பாடம் நடத்தவோ, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ இல்லை என குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி நோயாளிகள் ஏற்பாடு
தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நேரங்களில், மருத்துவமனை செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க போலி நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடைசி ஆய்வுக்கு முன், மருத்துவமனையில் நோயாளிகளும், டாக்டர்களும், ஊழியர்களும் இல்லாத நிலை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் ஒப்புதல்
பயங்கரவாத தொடர்புடைய உமர் நபி உள்ளிட்ட மூன்று டாக்டர்களும், தமது பதவிக்காலத்திலேயே நியமிக்கப்பட்டதாக பல்கலை வேந்தர் ஜாவத் அகமது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர்களின் பின்னணி குறித்து எந்தவித சரிபார்ப்பும் செய்யப்படவில்லை என்றும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ரூ.493.24 கோடி நிதி முறைகேடு
அல் பலாஹ் பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ரூ.493.24 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. என்ஏஏசி மற்றும் யுஜிசி அங்கீகாரம் இருப்பதாக பொய்யான தகவல்களை தெரிவித்து, மாணவர்களிடமிருந்து முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
