புதுடில்லி: மேற்காசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, போரை விரைவில் நிறுத்த வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சூழலில் இஸ்ரேல் பிரதமருடன் பேசிக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் போர்களை விரைவில் நிறுத்தி பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அந்த நாட்டின் மீது நடந்த தாக்குதல்களை அவர் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக கவனித்துக்கொண்டதற்காக அந்நாட்டு அதிபருக்கு நன்றி தெரிவித்தார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்த இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
