நமது நிருபர்: “போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம். உங்கள் ஆதரவு தேவையில்லை” என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடாக இருந்த பிரிட்டன் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.
பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், இனி எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவையில்லை. நாங்கள் இதை நினைவில் வைத்துக் கொள்வோம். நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு நடக்கும் போர்களில் உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது:
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்று வருகிறது. அவர்கள் நடத்தி வந்த அரசை முழுமையாக அழித்துவிட்டோம். இன்னும் சிறிது காலம் போர் தொடரும். இந்த போர் நம்ப முடியாத அளவிற்கு வெற்றியை பெற்று வருகிறது.
ஒரு வாரத்திற்குள் யாரும் நினைக்காத அளவிற்கு சாதனைகள் நிகழ்ந்துள்ளன. ஈரானின் கடற்படையில் இருந்த 44 கப்பல்கள் மற்றும் விமானப்படை அமைப்புகளை நாங்கள் அழித்துவிட்டோம்.
அவர்களின் பெரும்பாலான ஏவுகணைகளையும் நாங்கள் அழித்துவிட்டோம். இனி அந்த ஏவுகணைகள் அண்டை நாடுகளை அதிகமாக தாக்க முடியாது.
மேலும் அவர்கள் ஏவுகணைகள் தயாரிக்கும் உற்பத்தி மையங்களையும் கடுமையாக தாக்கியுள்ளோம். அவர்களின் ட்ரோன் உற்பத்தி திறனும் மிகவும் குறைந்துவிட்டது.
அவர்களுக்கு வலிக்கும் இடங்களில் நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம். அவர்களின் பல தலைமைத்துவ அமைப்புகளையும் அழித்துவிட்டோம்.
மினாபில் உள்ள ஈரான் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலுக்கும் ஈரானே காரணம். அந்த தாக்குதலில் பல மாணவிகள் உயிரிழந்தனர் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
