போராட்டங்களை ‘பேஷன்’ என கூறிய அமைச்சர் – அதிமுக, பாஜக கடும் கண்டனம்
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக அரசை எதிர்த்து தினசரி போராட்டங்கள் நடத்துவது தற்போது பேஷனாகி விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிய கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1,627 கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தினசரி 100 குற்றச் சம்பவங்கள் நடந்ததாகவும், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதாகவும் கூறினார். தனிமனித விரோதத்தின் அடிப்படையில் நடக்கும் குற்றங்களில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், தகவல் தெரிந்த பின் கருத்து தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், தேர்தல் நெருங்குவதால் தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவது வழக்கமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நந்தனம் அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பும்போது, “அப்படி ஒரு சம்பவமே தெரியாது” என அமைச்சர் பதிலளிப்பது அக்கறையற்ற பேச்சு என்றும், அது கடும் கண்டனத்திற்குரியது என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்ததாக சுட்டிக்காட்டி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடும் மருத்துவத் துறை ஊழியர்களை அமைச்சர் கொச்சைப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். கொரோனா காலத்திலும் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊழியர்களை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
