போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சி எதற்கு? – இபிஎஸ் கேள்வி
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கமும், அதனால் உருவாகும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடும் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியில் இருப்பதற்கான அவசியம் என்ன? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு சாமானியர் மீது இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அதேபோல் திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர் காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் புழக்கம் மற்றும் போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு தினசரி செய்தியாகி இருப்பதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும், அடுத்த நொடி யார் எந்த போதையில் தாக்குவார்கள் என்ற உயிர் பயத்தில் தமிழக மக்கள் வாழ வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தமிழகத்தில் கஞ்சாவே இல்லை” என வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி உயர கஞ்சா செடி தெரியவில்லையா என்றும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா விவரங்கள் அமைச்சருக்கும் முதல்வருக்கும் தெரியாதா என்றும் விமர்சித்துள்ளார்.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம்–ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த ஆட்சி என மீண்டும் கேள்வி எழுப்பிய அவர், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற முதல்வரிடம் சிக்கித் தவித்தது போதும் என்றும் கூறியுள்ளார். 2026ம் ஆண்டு விடியா ஆட்சியிலிருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்; மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
