சென்னை:
பொங்கல் பண்டிகை விவசாயத்தை போற்றும் விழாவாக இருக்கும் நிலையில், தேர்தல் விளம்பரத்திற்காக விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்துள்ளது திமுக அரசு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக கூட்டுறவு சங்கங்களில் பழைய பயிர்க் கடன் தொகையை முழுமையாக செலுத்தி, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, இதுவரை பயிர்க் கடன் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க திமுக அரசிடம் போதிய நிதி இல்லாததால், விவசாயிகளுக்கான பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி பயன்படுத்தி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது திமுக அரசு.
விவசாயத்தை போற்றுவதற்காகவே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தேர்தல் விளம்பர அரசியலுக்காக விவசாயிகளை ஏமாற்றுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
எனவே, விவசாயிகளின் பயிர்க் கடன்களை உடனடியாக புதுப்பித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை திமுக அரசு உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
