பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் மக்கள் மேடையில் வெளிவரும்: நயினார் நாகேந்திரன்
சென்னை: திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்த ஊழல் மோசடிகளை தொகுத்தால், பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஒரு முழு புத்தகமே வெளியிடலாம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ரூ.1,020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத் துறை புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதியாக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதே துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.888 கோடி ஊழல் நடந்ததாகவும் அமைச்சர் நேரு மீது குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இதுமட்டுமல்லாமல், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை எனக் கூறலாம். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மணல் கடத்தல் விவகாரம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக் குவிப்பு புகார், கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் நூல் கொள்முதல் ஊழல், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் செம்மண் கடத்தல் விவகாரம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் போக்குவரத்துத் துறை ஊழல், சென்னை மாநகராட்சியில் கழிவறை பராமரிப்பு குறித்த மேயர் பிரியா மீதான புகார், மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் என பட்டியல் நீளுகிறது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை அனைத்தையும் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஒரு புத்தகமே தயாரிக்க முடியும். பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் விரைவில் மக்கள் மேடையில் வெளிப்படுத்தப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்ய திமுக திட்டமிடும் எண்ணம் நசுக்கப்படும்.
இத்தனை காலம் மக்கள் வரிப்பணத்தை கையாடி பணக்கட்டுகளை எண்ணிய திமுக நிர்வாகிகள், விரைவில் சிறைக் கம்பிகளை எண்ணும் நாள் வரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
