டெஹ்ரான்: புதிய தாக்குதலுக்கு உள்ளானால், ஈரான் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உச்ச தலைவர் கமேனிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தொடர்ந்தால், அமெரிக்க ராணுவம் தலையிடும் என முன்னதாக முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அப்பாஸ் அராச்சி கூறியதாவது:
ஈரானில் ஏற்பட்ட கலவரம் 72 மணி நேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகள் புதிய தாக்குதலை தொடங்கினால், எங்களிடம் உள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம். இதற்காக ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகள் எந்த தயக்கமும் காட்டாது.
இது ஒரு அச்சுறுத்தல் அல்ல; உண்மை நிலையை வெளிப்படையாகச் சொல்கிறேன். நான் போரை விரும்பாதவன். ஆனால், முழுமையான மோதல் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்.
இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் வெள்ளை மாளிகைக்கு விற்க முயற்சிக்கும் கற்பனைகளை விட, இந்த மோதல் மிகப் பெரியதாகவும், பரந்த பிராந்தியத்தை பாதிப்பதாகவும் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
