பிரிட்டன் பல்கலைகளில் தீவிரவாத ஊடுருவல் குற்றச்சாட்டு; யு.ஏ.இ., உதவித்தொகை ரத்து
லண்டன்:
பிரிட்டன் பல்கலைகள் தீவிரவாத சிந்தனைகளின் பிடியில் சிக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டி, அங்கு பயிலும் தங்கள் நாட்டு மாணவர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) நிறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உயர் கல்வி பயிலும் தங்கள் நாட்டு சிறந்த மாணவர்களுக்கு, யு.ஏ.இ., அரசு பல ஆண்டுகளாக முழுமையான உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையின் கீழ் கல்விக் கட்டணம், தங்குமிடம், தினசரி செலவுகள், பயணச் செலவு மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரிட்டன் பல்கலைகளில் படித்து வரும் யு.ஏ.இ., மாணவர்களுக்கான உதவித்தொகையை அந்நாட்டு கல்வி அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிட்டன் பல்கலை வளாகங்களில், முஸ்லிம் பிரதர்ஹுட் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக யு.ஏ.இ., அரசு வகைப்படுத்தி உள்ளது. பல்கலை மாணவர்களை தீவிரவாத கருத்துக்களுக்குள் இழுப்பதாக இந்த அமைப்பு மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து, பல்கலை வளாகங்களில் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என பிரிட்டன் அரசிடம் யு.ஏ.இ., வலியுறுத்தியது. ஆனால், அந்த கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்கவில்லை. இதன் விளைவாக, பிரிட்டன் பல்கலைகளில் பயிலும் யு.ஏ.இ., மாணவர்களுக்கான உதவித்தொகையை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் படிக்கும் யு.ஏ.இ., மாணவர்களுக்கு உதவித்தொகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 8,000க்கும் அதிகமான யு.ஏ.இ., மாணவர்கள் பிரிட்டன் பல்கலைகளில் சேர்ந்து வருவதால், இந்த முடிவால் அந்த எண்ணிக்கை கணிசமாக குறையும் என கல்வி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
