லண்டன்: மேற்காசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் எல்.என்.ஜி. எனப்படும் இயற்கை திரவ எரிவாயு இரண்டு நாட்களில் முற்றிலும் தீர்ந்து போகும் அபாய நிலை உருவாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களின் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக எல்.என்.ஜி. டேங்கர்கள் ஐரோப்பாவுக்கு பதிலாக ஆசிய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிக விலைக்கு எரிவாயு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் தேசிய எரிவாயு நிறுவனத்தின் தகவல்படி, அந்நாட்டில் தற்போது இன்னும் இரண்டு நாட்களுக்கு தேவையான ‘காஸ்’ மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பிரிட்டனின் மற்ற எரிவாயு சேமிப்புகள் 12 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 90 முதல் 100 நாட்களுக்கு தேவையான எரிவாயு இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
