பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
இந்திய கிரிக்கெட்டில் வேகமாக உயர்ந்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான விளையாட்டு சாதனைகளை பாராட்டி, மத்திய அரசின் உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கி வைபவ் சூர்யவன்ஷியை கௌரவித்தார்.
14 வயதான இடதுகை ஆட்டக்காரரான வைபவ், இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார். அவரது அபாரமான ஆட்டத்திறன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால வளர்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்து, டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்தார். மேலும், விஜய் ஹசாரே டிராபி போட்டியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் வேகமான 150 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடித்தார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை ஆகிய இரண்டிலும் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற இரட்டைச் சாதனையும் வைபவின் பெயரிலேயே உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் அவர் அதிரடியான சதங்களை விளாசியுள்ளார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதம் விளாசி, அண்டர்-19 வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
தற்போது ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட வைபவ் சூர்யவன்ஷி தயாராகி வருகிறார். இளம் வயதிலேயே நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் அவரது சாதனைகளுக்கு கிடைத்த இந்த விருது, எதிர்காலத்தில் இந்திய தேசிய அணியில் அவர் இடம்பிடிப்பதற்கான முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
