கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைவதை மாநில மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே அரசியல் போட்டி கடுமையாகி வருகிறது. இதற்கிடையில், கோல்கட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜவுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மாநில வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில், பங்குராவின் பிர்ஷிங்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த நடவடிக்கையின் காரணமாக மேற்கு வங்கத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஸ்ஐஆர் செயல்படுத்தப்பட்டு பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். தேர்தலுக்கு முன்பு பொற்கால வங்காளத்தை உருவாக்குவோம் என்று கூறுபவர்கள், பிற மாநிலங்களில் வங்காளத்தைச் சேர்ந்தவர்களை தாக்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேற்கு வங்க மக்கள் பாஜ ஆட்சிக்கு வருவதை அனுமதிக்க மாட்டார்கள் என்று மீண்டும் வலியுறுத்திய மம்தா பானர்ஜி, மாநிலத்தின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார்.
