காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 133 பேர் உயிரிழந்ததாக பாக். தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நிலைகளை ஆப்கானிஸ்தான் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.
சமீபத்தில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் தரப்பு தெரிவித்தது. 19 ராணுவ சோதனைச்சாவடிகள் மற்றும் இரண்டு தளங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை பாகிஸ்தான் மறுத்து, குறைந்த அளவிலேயே சேதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகப் பதிவில், “எங்களது பொறுமை முடிவுக்கு வந்துள்ளது; இது நேரடி மோதலாக மாறியுள்ளது” என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, கந்தகார், காபூல் மற்றும் பக்தியா மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 133 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்யத் தயாராக உள்ளதாக ஈரானும் அறிவித்துள்ளது.
