பள்ளி நிலத்தை கல்வி நோக்கத்தைத் தவிர வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
மதுரை: எதிர்காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த அரவிந்த் தாக்கல் செய்த மனுவில், அப்பகுதியில் உள்ள முத்துமாலையம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளதாகவும், அந்த இடத்தில் எந்தக் கட்டடமும் கட்டாமல் மைதானமாகவே பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்ததாகவும், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, மக்கள் தானமாக வழங்கிய 8.67 ஏக்கர் நிலத்தில் பள்ளி அமைந்துள்ளதாக தெரிவித்தார். கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) மற்றும் பல்நோக்கு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த மையம் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடமாகவும், பிற நேரங்களில் வகுப்பறையாகவும் பயன்படுத்தப்படும் எனவும் விளக்கமளித்தார். மேலும், புதிய கட்டடங்கள் விளையாட்டு மைதானப் பகுதியில் அல்லாமல், வேறு சர்வே எண்களில் அமைக்கப்படுவதால் மைதானத்தின் பரப்பளவு குறையாது என்றும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வரைபடத்தின் அடிப்படையில் தற்போது உள்ள விளையாட்டு மைதானப் பகுதி ஐ.டி.ஐ. அல்லது தங்குமிட கட்டடங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்றும், விளையாட்டு மைதானம் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது என அரசு தரப்பு அளித்த உறுதியையும் பதிவு செய்வதாக தெரிவித்தனர். அதேசமயம், எதிர்காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.
