டெஹ்ரான்: உலகிலேயே அமெரிக்க ராணுவம் வலிமையானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், பலமான ராணுவமும் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உண்டு என ஈரான் உயர் தலைவர் மதகுரு அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலகின் வலிமையான ராணுவம் பல முறை கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறது. ராணுவ தளவாடங்களில் போர்க்கப்பல் ஆபத்தானது தான். அதே நேரத்தில், போர்க்கப்பலை கடலின் ஆழத்திற்கு அனுப்பும் அளவுக்கு மோசமான ஆயுதங்களும் உள்ளன,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “47 ஆண்டுகளாக ஈரானை அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை” என்ற டிரம்ப் கருத்தை சுட்டிக்காட்டிய கமேனி, “அது ஒரு ஒப்புதல். உங்களாலும் அதனை செய்ய முடியாது,” என பதிலளித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை மையமாக கொண்டு அமெரிக்கா — ஈரான் இடையே நீண்டகால மோதல் நிலவி வருகிறது. ஈரானை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டு வந்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
மேற்காசியாவில் பதற்றத்தை குறைக்க வேண்டும் என அரபு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானை நோக்கி போர்க்கப்பல்கள் அனுப்பப்படலாம் என டிரம்ப் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
