இஸ்லாமாபாத்: உலகம் முழுவதும் பண உதவி கேட்டு யாசகம் கேட்பது மிகுந்த அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத்தில் நேற்று இரவு பாகிஸ்தானின் முன்னணி ஏற்றுமதியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போதைய நிலையில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், அதில் நட்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் அடங்கியுள்ளன என்றும் கூறினார். கடன் வாங்கச் செல்லும் ஒருவரின் தலை எப்போதும் குனிந்தே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நானும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் உடன் சேர்ந்து உலகம் முழுவதும் பண உதவி கேட்டு யாசகம் எடுக்கும்போது வெட்கப்படுகிறோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். கடன் வாங்குவது நமது சுயமரியாதைக்கு பெரும் சுமையாகும் என்றும், அவமானத்தால் எங்களது தலைகள் குனிகின்றன என்றும் அவர் தெரிவித்தார். கடன் வழங்கும் நாடுகள் செய்யச் சொல்லும் பல விஷயங்களுக்கு எங்களால் மறுப்பு சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விரக்தியான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
