மதுரை: “பணம் நமக்கு, பிரச்னைகள் மக்களுக்கு என்பதே திமுக மாடல்,” என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
‘வெற்றிவேல்’ என மூன்று முறை முழக்கமிட்டு உரையைத் தொடங்கிய அவர், அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் முருகன் அருளைப் பெற்றதாக குறிப்பிட்டார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார்.
திருப்பரங்குன்றம் சென்றபோது தீபம் ஏற்ற கோரிக்கையில் உயிரிழந்த பூர்ணசந்திரனை நினைவு கூர்ந்த அவர், அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறினார். “வாய்மையே வெல்லும்” என்றும் முருக பக்தர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
திமுக அரசு ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக மக்களை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் மதுரை பின்னடைந்ததாகவும் கூறினார். ஏழை மக்களுக்கு வீட்டு வசதி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
சட்டம் ஒழுங்கு மீதான கவனம் குறைந்துள்ளதாகவும், போதைப்பொருள் மற்றும் மாபியா செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தம் தமிழக இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு வளர்ச்சி அடைந்த தமிழகமும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
