டில்லியில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புதிய தலைவர் நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.வின் தேசிய தலைவர் பொறுப்பை நிதின் நபின் ஏற்றுள்ளார். கட்சியை வளர்த்தெடுத்த அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
“நான் பா.ஜ. கட்சியின் ஒரு சாதாரண ஊழியனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்போது பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் தான் என் பாஸ்,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கட்சியில் தலைமைகள் மாறலாம்; ஆனால் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. தலைமையகம் மாறினாலும், கட்சியின் பயண திசை மாறுவதில்லை என்றார். பா.ஜ. ஒரு கருத்தியல் இயக்கமாக தொடங்கி, இன்று வெற்றிகரமான ஆளும் கட்சியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.
நிதின் நபினின் பொறுப்பு பா.ஜ. வரை மட்டுமல்ல; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் அவரது கடமையாகும் என்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பணியையும் முழுப் பொறுப்புடன் நிறைவேற்றிய அனுபவம் நிதின் நபினுக்கு உள்ளது என பாராட்டினார்.
இளமையும் நீண்டகால அனுபவமும் அவரிடம் உள்ளதாக கூறிய பிரதமர், இது கட்சித் தொண்டர்களுக்கு பெரும் பலனாக இருக்கும் என்றார். சில அரசுகள் நீண்டகாலம் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாத சூழலில், பா.ஜ. அந்த தடையை உடைத்துள்ளதாகவும், பல மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பா.ஜ. விரைவில் கேரளாவிலும் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
