சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டசபையில் நாளை (பிப்ரவரி 17) தமிழக அரசு சார்பில் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைய உள்ளது. அதனால், தமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது.
இது குறித்து உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே, பெண்களை கவரும் வகையில் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை 3,000 ரூபாய் மற்றும் கோடைக்கால சிறப்புத்தொகை 2,000 ரூபாய் என தலா 5,000 ரூபாய் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் வெற்றிக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், விஜய் வருகையால் கிறிஸ்துவர்கள் ஓட்டு அவருக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும், இளைஞர்கள் ஓட்டும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்க வைத்துக் கொள்ளவும், இளைஞர்களை கவரவும் இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியாகலாம்.
மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கிய விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளதால், இக்கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும், காங்கிரஸ் – தி.மு.க. இடையேயான மோதலும் சட்டசபையில் எதிரொலிக்கலாம் என கூறப்படுகிறது.
