புதுடில்லி: லோக் சபாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானே எழுதியதாக கூறப்படும் புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசியதைத் தொடர்ந்து, “யார் இந்த நரவானே?” என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் வலுத்துள்ளது.
நரவானே – ஒரு ப்ளாஷ்பேக்
1960-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தவர் மனோஜ் முகுந்த் நரவானே. இவரது தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர்; தாயார் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தவர். புனேவில் பள்ளி படிப்பை முடித்த அவர், முதுகலை படிப்பை சென்னை பல்கலைக்கழகம்-இல் நிறைவு செய்தார்.
அதன்பின் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற நரவானே, பாதுகாப்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், முதலில் சீக்கிய காலாட் படையில் பணியாற்றினார். சுமார் 40 ஆண்டுகள் ராணுவ சேவை புரிந்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு–காஷ்மீர், இந்தியா–சீனா எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக பணியாற்றியவர் நரவானே. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனை வழிநடத்தி, அசாம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையிலும் அவர் இடம் பெற்றிருந்தார்.
2019-ம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக பதவியேற்ற நரவானே, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 2022-ம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வு பெற்றார்.
நரவானே புத்தகத்தில் என்ன உள்ளது?
நரவானே எழுதியதாக கூறப்படும் சுயசரிதை நூலின் பெயர் Four Stars of Destiny (தமிழில்: நான்கு நட்சத்திரங்களின் விதி). இந்த புத்தகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டு ஒரு செய்தி நிறுவனம் மற்றும் சில ஊடகங்கள், புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டன.
அந்த நூலில், 2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய–சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லையில் உருவான பதற்றம் குறித்து நரவானே எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டுரை பிரபல பத்திரிகையில் வெளியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த பத்திரிகையின் அச்சுப் பிரதியை மையமாகக் கொண்டு தான் ராகுல் காந்தி லோக் சபாவில் பேச முயன்றார். இதனை கண்டித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
