புதுடில்லி: நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.
டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் அமித்ஷா பேசியதாவது: வரும் இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும். போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்த பிறகு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரை 3 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும். குற்றவியல் வழக்குகளில் தண்டனை விகிதம் 80 சதவீதமாக உயரும்.
கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள மைல்கற்களில் இதுவும் ஒன்றாகும். டில்லி போலீசார் எப்போதும் அர்ப்பணிப்புடன் தனது கடமைகளை செய்து வருகின்றனர். 2014ம் ஆண்டுக்கு முன்பு கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு சவாலாக நான்கு பிரச்னைகள் இருந்தன. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, வடகிழக்கு மற்றும் நக்சலிசம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வன்முறை வழக்குகள் 80%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளன.
நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
