நகராட்சி துறையில் ரூ.366 கோடி லஞ்சம்: அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை கடும் குற்றச்சாட்டு
சென்னை: அமைச்சர் கே.என். நேரு பொறுப்பு வகிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணியிட மாறுதல்களுக்காக ரூ.366 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான விரிவான ஆதாரங்களுடன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்திருப்பதாக ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ஒப்பந்தங்களை வழங்குவதில் ரூ.1,020 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், அதற்கான ஆவண ஆதாரங்களையும் இணைத்திருந்தது.
மேலும், பணி நியமனங்களில் ஒருவருக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக கூறி, வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த இரண்டு கடிதங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தகவல் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டிருந்தது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல், பூர்வாங்க விசாரணை மட்டுமே நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 14ம் தேதி மூன்றாவது கடிதத்தை அமலாக்கத்துறை டிஜிபிக்கு அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பொறியாளர்கள் பணியிட மாறுதலுக்காக குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி தொடர்புகள் மூலம் 340 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 10 முதல் 15 முக்கிய லஞ்ச பரிவர்த்தனை சம்பவங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் நேரு, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் சேர்ந்து ரூ.365.87 கோடி அளவுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் டிவிஎச் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடு மூலம் ரூ.2.33 கோடி, வெளிநாட்டு சொத்துகள் வழியாக ரூ.44 கோடி மற்றும் ஆடம்பர செலவுகளுக்காக ரூ.75 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, ரூ.50 கோடிக்கு ஹோட்டல் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அமெரிக்காவில் 34 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாகவும், சிங்கப்பூருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் ரூ.70 கோடி மதிப்பில் இரண்டாவது சொத்து வாங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. ‘முதல் கட்ட விசாரணை’ என்ற பெயரில் தாமதம் செய்யக்கூடாது என்றும், வழக்கு பதிவு தாமதமானால் ஆதாரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
