பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார். திருஆவினன்குடி கோவிலில் காவடி எடுத்து வழிபட்ட அவர், படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அடிவாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா என்றும், தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச். ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அவர், உட்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சென்னை–பெங்களூரு, சென்னை–ஹைதராபாத் விரைவு ரயில் திட்டங்கள், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டால் தென்னை மற்றும் முந்திரி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதேபோல் இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, இந்த பட்ஜெட் இந்தியா முழுமைக்கும் சிறந்த பட்ஜெட் என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களுக்கானவை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வருகிற 10-ம் தேதி பழனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தானும் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
கரூர் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, அனைவருக்கும் முதல்வர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
